2005-06 முதல் 2019-21 இடையில் 15 ஆண்டுகளில் சுமார் 415 மில்லியன் இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
Multidimensional Poverty Index (MPI) எனப்படும் பல பரிமாண வறுமைக் குறியீட்டை, ஐநா வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு இணைந்து ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த விவரத்தின்படி இந்தியாவில் வறுமை 55.1 சதவீதத்தில் இருந்து 16.4 சதவீதமாக குறைந்துள்ளது.
உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வை நேரடியாக பாதிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் வறுமையை குறைத்துள்ளதோடு, உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை அடைந்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வறுமையால் எளிதாக பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் மற்றும் பின்தங்கிய சாதிக் குழுக்களில் உள்ள மக்கள் உட்பட ஏழ்மையான மாநிலங்கள் மற்றும் குழுக்கள் மிக விரைவான முழுமையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் இன்னும் 230 மில்லியனுக்கும் (20 கோடிக்கும்) அதிகமான ஏழைகள் உள்ளனர். உலகளவில், 1.1 பில்லியன் மக்கள், அல்லது மொத்த மக்கள்தொகையில் சுமார் 18 சதவீதம் பேர், ஏழைகளாக உள்ளனர் எனவும் அந்த அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.