இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி 
இந்தியா

லேண்டர் தரையிரங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்! – பிரதமர் மோடி

Staff Writer

நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்து நாடுதிரும்பிய பிரதமா் மோடி, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக நேரடியாக பெங்களூருக்கு சென்றார். அவருக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திராயன் -3 திட்டம் பற்றியும், விஞ்ஞானிகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்து தெரிவித்த பிரதமர், அதனைத் தொடர்ந்து உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, ”சந்திராயன் -3 வெற்றிக்கு பெண் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானது. சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும். இது எதிர்கால தலைமுறைக்கு அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும். மக்களின் நலன் என்பது எங்களின் உட்சபட்ச கடமையாகும்.

நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்.

2019-இல் சந்திரயான் - 2 நிலவில் தனது தடத்தை பதித்த இடம் திரங்கா(மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா எனப் பெயர் சூட்டப்படுகிறது” என்றார்.