மணிப்பூர் மாநில முதல்வர் என்.பிரேன் சிங் 
இந்தியா

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யமாட்டேன் – மணிப்பூர் முதல்வர் திட்டவட்டம்!

Staff Writer

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யமாட்டேன் என மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினர் எதிர்க்கின்றனர். இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே இந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் இதுவரை சுமார் 120 போ் பலியாகினர். 3,000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த 10,000 வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இன்னும் மணிப்பூரில் சுமூகமான நிலை திரும்பாத நிலையில், நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங் ராஜிநாமா செய்ய இருப்பதாகவும், அவர் இன்று மாலை 4 மணியளவில் மாநில ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின. ஆனால், இம்பாலில் உள்ள அவரது வீட்டில் வெளியே மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர் வீடு திரும்பியதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கிழிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரேன் சிங்க், ”இப்படி ஒரு முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யமாட்டேன்” என ட்விட் செய்துள்ளார்.