ம.பியில் கொடூரமாக நடந்துகொண்ட மனிதர் 
இந்தியா

“பாஜகவின் உண்மை முகம்...” ராகுல் காந்தி கடும் கோபம்!

Staff Writer

சமீபகாலங்களில் வெளியான காணொளிகளில் பெரும் அதிர்ச்சியை அளித்தது பழங்குடி இனத்தவர் மீது ஒருவர் மதுபோதையுடன் சிறுநீர் கழிக்கும் காணொளிதான்.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பா.ஜ.கவைச் சேர்ந்த கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், சாலையோரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகரின் இந்த கொடூரச் செயலுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பா.ஜ.க அரசு பிரவேஷ் சுக்லாவின் மீது வன்கொடுமை மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனித குலத்துக்கு விரோதமான கட்சி பா.ஜ.க என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பழங்குடி சகோதர சகோதரிகளின் மீதான கொடுமைகள் பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் அதிகரித்து வருகிறது.

மத்திய பிரதேச பா.ஜ.க தலைவரின் மனிதாபிமானமற்ற செயல்பாட்டால் ஒட்டுமொத்த மனித குலமும் அவமதிக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகள் மற்றும் தலித்கள் மீது பாஜக கொண்டிருக்கும் வெறுப்பின் அருவருப்பான உண்மை முகம் இதுதான். மனித குலத்துக்கு விரோதமான கட்சி பா.ஜ.க" என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரின் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இல்லத்தை அரசாங்கமே புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது.

குற்றம் சாட்டப்பட்டவருடன் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என மறுத்துள்ள மாநில பாஜக இதை விசாரிக்க நால்வர் குழு ஒன்றை அமைத்தது.

இம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் இப்பிரச்னை முக்கியமான தேர்தல் பிரச்னை ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.