நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் செப்.18 முதல் 22ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பதினேழாவது மக்களவையின் 13ஆவது கூட்டத் தொடரும், மாநிலங்களவையின் 261ஆவது கூட்டத்தொடருமான இந்த சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்படுகிறது என்று பிரகலாத் ஜோஷி தன் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தொடர் ஐந்து அமர்வுகளாக நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இனிமையான கலந்துரையாடல்களும் விவாதங்களும் இந்தக் கூட்டத்தில் நடைபெறுவதை, எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் பிரகலாத் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும், இந்த சிறப்புக் கூட்டத் தொடருக்கான குறிப்பான காரணம் எதையும் அரசுத் தரப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த அறிவிப்புக்கு சிவ சேனா கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. உத்தவ் பால் தாக்க்ரே சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, இந்தக் கூட்டத்தொடரை விநாயக சதுர்த்தி காலகட்டத்தில் கூட்டியிருப்பது துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இந்துக்களின் மன உணர்வுக்கு பாதகமானது என்றும் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.