சனாதன தர்மம் குறித்துப் பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும், ஆதரவும் மாறி மாறி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியும், இந்து அமைப்புகளும் உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
கடும் எதிர்ப்புகளுக்கு பதில் அளித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், சட்ட ரீதியாக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், வழக்கமான மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ராய்பூரில், இந்து மத நம்பிக்கையை புண்படுத்தியதாக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153ஏ, 295ஏ-ன் கீழ் உதயநிதி மீதும், அவரது கருத்தை ஆதரித்த பிரியங்கா கார்கே மீதும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.