மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திய அஜித் பவார், ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.
இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அமைச்சராக பதவியேற்றவர்களுக்கு துறை ஒதுக்கப்படாமல் இழுபறி இருந்துவந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை துறைகள் ஒதுக்கப்பட்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அஜித் பவாருக்கு மாநில கருவூலத்தை நிர்வகிக்கும் நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஏகநாத் ஷிண்டே தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறையை தன்வசம் வைத்திருப்பார். மற்றொரு துணை முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து உள்துறையை நிர்வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகன் புஜ்பாலுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளை துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் முந்தைய "மஹா விகாஸ் அகாதி" கூட்டணி அரசாங்கத்திலும் இதே பதவியை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்செய் முண்டேவிற்கு விவசாயத்துறை கிடைத்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தரப்பில் பலர் முக்கிய துறைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித்துறை கிடைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தியதற்காக அவருக்கு கிடைத்த பரிசாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.