மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும், இன்று (மார்ச் 9) முதலே அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணையர் பதவி விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, சுதந்திரமான நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை தடுத்து நிறுத்தாவிட்டால், நாட்டின் ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.