கர்பூரி தாக்குர்  
இந்தியா

பாரத ரத்னா விருது- யார் அந்த கர்ப்பூரி தாக்குர்?

Staff Writer

’மக்கள் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட- பீகார் முன்னாள் முதலமைசர் மறைந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் குடிமக்களுக்கான மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது 1954ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை முதலிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

2019இல் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக், மறைந்த இசைக் கலைஞர் பூபன் ஹசாரியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக யாருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வரும் குடியரசு தினத்தையொட்டி கர்பூரி தாக்குருக்கு, அவரது மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று இரவு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

கர்ப்பூரி தாக்குர் யார்?

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டம் பிதோஜ்கியா கிராமத்தில் 1924 ஜனவரி 24ஆம் தேதி பிறந்தார் கர்பூரி தாக்குர். மாணவப் பருவத்திலே தேசியவாத சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். அகில இந்திய மாணவர் கூட்டமைப்பில் இணைந்து செயல்பட்டார். சுதந்திரப் போராட்டத்தின் மீதிருந்த பற்றுதலால் பட்டப் படிப்பைக் கைவிட்டவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிஷ் அரசால் கைதுசெய்யப்பட்டு 26 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து 1952இல் முதல்முறையாக பீகாரின் தேஜ்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர் நலனுக்காகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகவும் குரல் கொடுத்து இந்தியா முழுவதும் அறியப்படும் தலைவரானார்.

கடந்த 1970-1971, 1977-1979 என இரண்டு முறை பீகார் முதலமைச்சராகப் பதவி வகித்தார். இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 1978இல் பிற்படுத்தப்பட்டோருக்காக 26% இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து பெரும் மாற்றத்தை உண்டாக்கினார். முன்னதாக, அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, கட்டாய ஆங்கிலம் என்பதற்குத் தடைவிதித்தார்.

1988 பிப்ரவரி 17ஆம் தேதி காலமானார்.

அவரது 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.