தில்லியின் முதலமைச்சராகப் பதவிவகித்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிறு அதிரடியாக தான் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து அடுத்த முதலமைச்சர் யார் என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.
துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் கெஜ்ரிவாலைப் போல வரும் தேர்தலில் மக்கள்தன்னை சுத்தமானவன் எனக் கூறிய பிறகே மீண்டும் அமைச்சராக வருவேன் என்று கூறிவிட்டார். இதனால் அவர் எதிர்பார்ப்பு வரிசையில் இடம்பெறவில்லை.
கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது பிரச்னைகளைக் கையாண்ட அமைச்சர் அதிசியின் பெயர் முக்கியமாக அடிபடுகிறது.
இந்த சூழலில் நாளை மாலை 4.30 மணிக்கு தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனாவை கெஜ்ரிவால் சந்திப்பது உறுதியாகியுள்ளது. அப்போது அவர் தன் பதவிவிலகல் கடிதத்தை அளிப்பார். அத்துடன் புதிய முதலமைச்சர் பெயரையும் அவர் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு கூடி, அடுத்த முதலமைச்சர் குறித்து ஆலோசனையில் ஈடுபடும் என்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரைத் தேர்வுசெய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.