சேத்தன் சிங் 
இந்தியா

ரயில்வே காவலர் 4 பேரை சுட்டுக் கொல்ல என்ன காரணம்? சக ஊழியர் வாக்குமூலம்!

Staff Writer

மும்பை ரயிலில் மூத்த அதிகாரி உள்பட 4 பேரை, ரயில்வே பாதுகாப்பு படைவீரர் சேத்தன் சிங் சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை அவருடன் பணிபுரிந்த சக ஊழியர் ஒருவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நகரை நோக்கிப் பயணித்த ரயிலில் நேற்று காலை 5:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததுள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியான சேத்தன் சிங், ரயில்வே காவல்துறையின் துணை உதவி ஆய்வாளரான திகாரம் மீனா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதன் பிறகு, மூன்று பயணிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  இது தொடர்பான விசாரணையில் பல்வேறு  பல உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படையின் காவலர் கன்ஷியாம் ஆச்சார்யா கூறுகையில், ”சேத்த சிங் தனக்கு உடல்நிலை சரியில்லை என உதவி ஆய்வாளரான மீனாவிடம் கூறினார். நான் அவரின் உடலை தொட்டுப் பார்த்தேன். அவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.  

சேத்தா சிங் ரயிலில் இருந்து இறங்க விரும்பினார். ஆனால், மீனா அவரை இரண்டு மணி நேரம் பணியில் இருக்க வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக மும்பை மத்திய கட்டுப்பாடு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும் சேத்தனை பணியில் இருக்க சொன்னார்கள். பணி முடிந்து மும்பையில் மருத்துவம் பார்க்கலாம் என்றார்கள்.

“சேத்தனை ஓய்வு எடுக்க சொன்ன மீனா, அவரது துப்பாக்கியை வாங்கிக் கொண்டார். நான் சேத்தனை அழைத்து சென்று ஒரு ஒரு காலி இருக்கையில் படுக்க வைத்துவிட்டு வந்துவிட்டேன். பத்து நிமிடங்களுக்கு பிறகு அவர் என்னிடம் துப்பாக்கியை கேட்டார். நான் அவரை ஓய்வு எடுக்க சொன்னேன். இதனால் ஆத்திரமடைந்த சேத்தன், என்னுடைய கழுத்தை நெறிக்க முயன்றார். நான் கையை தட்டிவிட்டேன். அவர் தவறுதலாக என்னுடைய துப்பாக்கியை எடுத்துவிட்டார்.” என்றவர், தன்னுடைய துப்பாகியை சேத்தன் எடுத்தது தொடர்பாக உடனடியாக மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகே, சேத்தன் மீனாவையும் பொதுமக்கள் மூன்று பேரையும் சுட்டுக்கொன்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரான இந்த காவலருடைய தந்தை ஏற்கெனவே ஆர்பிஎப் -இல் பணியில் இருந்தவர். அவரது மரணத்துக்குப் பிறகு சேத்தனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் சேத்தன் மனநிலை சரியில்லாமல் இருந்தவர் என்று கூறுகின்றனர். மனநிலை சரியில்லாவதவரிடம் துப்பாக்கி வழங்கப்பட்டது ஏன் என்ற ரீதியில் துறை விசாரணை செல்லும் எனத் தெரிகிறது.