வயநாடு முண்டக்கை பாலத்தைத் தாண்டிச் சென்ற கடைசிப் பேருந்து 
இந்தியா

வயநாடு- முண்டக்கைக்குச் சென்ற கடைசிப் பேருந்து!

Staff Writer

முந்நூறு பேருக்கும் மேல் உயிர்பலி கொண்ட கேரள வயநாடு நிலச்சரிவில், முண்டக்கை, ஊரல்மலை கிராமங்களுக்கு இடையில் அடித்துச்செல்லப்பட்ட பாலத்தின் வழியாக, கடைசியாகக் கடந்துசென்ற பேருந்து பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

வயநாடு சூரல்மலையில் நிறுத்தப்பட்டிருக்கும் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அந்தப் பேருந்து, அருகில் நிகழ்ந்துமுடிந்த பெரும் நிலச்சரிவுக்கு உயிர்ப்பில்லாத மவுன சாட்சி என்று சொல்லலாம்.

முண்டக்கை கிராமத்துக்கு இயக்கப்படும் அந்தப் பேருந்து, கடந்த 29ஆம் தேதியன்றும் வழக்கம்போல கல்பெட்டாவிலிருந்து புறப்பட்டது. இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 9.45 மணிக்கு முண்டக்கைக்குப் போய்ச் சேர்ந்தது. அதன்பிறகு சூரல்மலைவரை போய் பேருந்தை அங்கு நிறுத்திவிட்டு ஓட்டுநரும் நடத்துநரும் இரவு தங்கிவிடுவார்கள். இதுதான் அவர்களின் அன்றாட வழக்கம்.

கடந்த திங்கள் இரவும் இதேபோல சூரல்மலை கோயிலுக்கு முன்பாக உள்ள கிளினிக் பக்கம் நிறுத்திவிட்டு, அங்குள்ள கட்டத்தில் தங்கிக்கொண்டார்கள்.

முண்டக்கையில் நள்ளிரவு ஒரு மணிக்கு அதாவது செவ்வாய் அன்று முதல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நடத்துநர் முகமது குஞ்ஞிக்கோ ஓட்டுநர் சஜித்துக்கோ இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால் சம்பவ இடத்துக்கும் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கும் இடையே இரண்டு கி.மீ. தொலைவு.

இரண்டாவது நிலச்சரிவு அதிகாலை 4 மணிவாக்கில் ஏற்பட்டுள்ளது. பெரிய பாறாங்கற்கள் வந்து மோதியதாலும் மரங்கள் முறிந்து விழுந்ததாலும் பெரும் சத்தம் ஏற்படவே, இரண்டு பேரும் எழுந்துகொண்டார்கள்.

இதற்கிடையே, கல்பெட்டா பணிமனை ஸ்டேசன் மாஸ்டர் பிரசாந்த், நிலச்சரிவைப் பற்றி கேள்விப்பட்டு கவலையடைந்தார். 3 மணியளவில் முகமதுவையும் சஜித்தையும் தொடர்புகொள்ள பல முயன்றுள்ளார். ஆனால் அழைப்பே போகவில்லை.

பிறகு நான்கு மணிக்கு அவர்களே பிரசாந்தை அழைத்து தாங்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பேருந்துக்குகூட சேதம் ஏதும் ஆகவில்லை எனச் சொன்னதும்தான் பிரசாந்த் நிம்மதி அடைந்தார். உடனடியாக இருவருக்கும் வேண்டப்பட்டவர்கள் போனில் அவர்களை அழைத்து விசாரிக்கத் தொடங்கினார்கள். இருவரும் விடாமல் பதில் சொன்னபடி இருந்தார்கள்.

பொழுதும் விடிந்தது. அவர்களால் அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை.

நேற்று இரவு எந்தப் பாலத்தைக் கடந்து அவர்கள் நின்றிருக்கும் இடத்துக்கு வந்தார்களோ, அந்தப் பாலத்தைக் காணவில்லை. சூரல்மலை சந்தை, கட்டடங்கள், வீடுகள், மற்ற குடியிருப்புப் பகுதிகள் என எல்லாமே துடைத்து அழிக்கப்பட்டதைப் போல அடித்துச்செல்லப்பட்டிருந்தன.

உடனே அவர்கள் கையிலிருந்த செல்போன் சார்ஜில் கண்ணால் பார்த்ததை வீடியோவாக எடுத்து, நண்பர்களுக்கு அனுப்பி உதவிக்கு உடனே அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அதன்பிறகு நடந்ததை நாடே நேரலையாகப் பார்த்தது.

களத்தில் குதித்த முப்படையினரும் கைகோத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

புதன்கிழமை காலையில் இராணுவத்தினர் பெய்லி பாலத்தை உருவாக்கிவிட்டார்கள். இரு பக்கங்களுக்கும் மீட்புப் பணிக்கான போக்குவரத்து தொடங்கிவிட்டது.

முண்டக்கை தாண்டி நிறுத்தப்பட்டிருக்கும் அந்தப் பேருந்து மட்டும் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடத்துநர் முகமது குஞ்ஞி மட்டும் மாலை 6 மணிக்கு பெய்லி பாலத்தின் வழியாக ஆற்றைக் கடந்து இந்தப் பக்கம் வந்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram