எடியூரப்பா 
இந்தியா

எடியூரப்பாவை கைது செய்ய பிடிவாரண்ட்! - நீதிமன்றம் அதிரடி

Staff Writer

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு எதிரான போக்சோ வழக்கில் பிணையில் வெளியே வர முடியாத கைது ஆணையைப் பெங்களூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா மீது கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா, “அவசியம் என்றால் சி.ஐ.டி. போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சி.ஐ.டி. அதிகாரிகள்தான் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்.” என்றார்.

இதற்கிடையே, எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் எனச் சிறுமியின் சகோதரர் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், எடியூரப்பாவை கைது செய்வதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.