அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
அரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிா்த்து ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் மல்யுத்த வீராங்கனை கவிதா ராணி, ஆளும் பாஜக சாா்பில் விமானப் படையின் முன்னாள் கமாண்டர் யோகேஷ் குமார் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது முன்னிலை வகித்து வந்த வினேஷ் போகத், இடையே சற்று பின்னடைவைச் சந்தித்தார்.
பின்னர் மீண்டும் முன்னிலை பெற்ற அவர், இறுதிச் சுற்று முடிவில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வினேஷ் போகத் 65,080 வாக்குகளும், யோகேஷ் குமார் 59, 065 வாக்குகளும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சுரேந்தர் 10,158 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஆம் ஆத்மியின் கவிதா ராணி 1,280 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
வினேஷ் போகத்தின் வெற்றிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.