மருந்து நிறுவனத்துக்கு நிலம் கையப்படுத்த பேச்சுவார்த்தைக்கு போன மாவட்ட ஆட்சியரையும் மற்ற அதிகாரிகளையும் கிராம மக்கள் விரட்டி அடித்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள லக்செர்லா என்ற கிராமப்பகுதியில் புதிதாக மருந்து நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் தேவைப்படும் நிலையில், லக்செர்லா கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் இந்த கிராமத்துக்குச் சென்றனர். அப்போது, மருந்து நிறுவனங்களுக்கு நிலம் வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மருந்து நிறுவனம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விவசாய நிலம் உள்ளதால் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள், விவசாயிகள் அதிகாரிகள் மீது தாக்குதலை தொடங்கினர். இதில் சில அதிகாரிகள் லேசான காயமடைந்தனர். இதையடுத்து பயந்துபோன அதிகாரிகள் வேகவேகமாக ஓடி தங்களின் வாகனங்களில் ஏறி அமர்ந்தனர். ஆனாலும் கிராம மக்கள் அவர்களின் கார் மீது கல், கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.