மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மைய அரசு நிறுத்தியபிறகும் அதற்கான வரியை வசூலிப்பது ஏன் என மக்களவையில் வி.சி.க. உறுப்பினர் இரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.
இன்று கேள்வி நேரத்தின்போது அவர் எழுப்பிய இக்கேள்விக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
”ஜிஎஸ்டி இழப்பீட்டு வரியாக 2023-24ஆம் ஆண்டுவரை 6,14,036 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் மாநிலங்களுக்கு 4,70,648 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாகத் தரப்பட்டது. 2022 ஆம் ஆண்டுடன் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஜிஎஸ்டி இழப்பீடும் நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகும் ஜிஎஸ்டி இழப்பீட்டு வரியென தொடர்ந்து வசூலிக்கப்படுவது ஏன்?”- இது இரவிக்குமார் எழுப்பிய கேள்வி.
அமைச்சர் நிர்மலா அளித்த பதில்:
“ ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின் அடிப்படையில் அந்த ஜிஎஸ்டி வரியை வசூலிப்பது மார்ச் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கோவிட் நேரத்தில் ஜிஎஸ்டி வசூல் போதுமான அளவில் இல்லை. எனவே, மாநிலங்களுக்கு உறுதியளித்தபடி ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்காகக் கடன் வாங்கி மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக் கடனை அடைப்பதற்காகவே 2022-க்குப் பிறகும் ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி வசூலிப்பது என ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது. “
அமைச்சரின் பதிலால் இரவிக்குமாரின் சந்தேகம் தீரவில்லை.
“கடனை அடைப்பதற்காக மட்டும்தான் இப்போது ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது என அமைச்சர் கூறுகிறார். இந்திய ஒன்றிய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான கூடுதல் வரியாக மாநிலங்களிலிருந்து வசூலித்த தொகை 2019-20 இல் 88307 கோடி; 2020-21 இல் 79,152 கோடி ; 2021-22 இல் 98,878 கோடி; 2022-23 இல் 76,837 கோடி ஆக மொத்தம் 3,43,174 கோடி ஆகும். ஆனால் அதே ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மொத்தமாக 4,70,648 கோடி ஆகும். அதாவது 1. 27 லட்சம் கோடி மட்டும்தான் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசால் கூடுதலாகத் தரப்பட்டது.
கடந்த 2022 இல் 1,25,862 கோடியும், 2023 இல் 1,45,000 கோடியும் ஜிஎஸ்டி காம்பன்சேஷன் செஸ்ஸாக வசூலித்துள்ளனர். அதன்மூலம் மாநிலங்களுக்குக் கொடுத்ததைவிட கூடுதலாக 1,43,388 கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்குக் கிடைத்துள்ளது.
நடப்பு ஆண்டான 2024 -25 இல் ஜிஎஸ்டி செஸ் ரூ.1,51,009 கோடி வசூல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதையும் சேர்த்தால் இந்த நிதி ஆண்டு முடிவில் மொத்தமாக 2,94,397 கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வருவாய் கிடைக்கும். மேலும் 2 ஆண்டுகள் செஸ் வசூலிக்கப்படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். அதில் குறைந்தபட்சமாக 3 லட்சம் கோடி ரூபாய் செஸ் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும். ஆக மொத்தம் 6 லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் இப்படி கூடுதல் வரியாக ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகிறது. அதில் மாநிலங்களுக்கும் பங்கு கொடுப்பதில்லை, மக்கள் நலத் திட்டங்களுக்கும் செலவிடுவதில்லை. அப்படியானால் செஸ், சர்சார்ஜ் என வசூலிக்கப்படும் கூடுதல் பணம் எங்கேதான் போகிறது?” - இதுதான் இரவிக்குமாரின் சந்தேகமும் கேள்வியும்.
மைய அரசின் தரப்பில் இதற்கு யாராவது விளக்கம் தருவார்களா எனப் பார்ப்போம்.