வசுந்தரா ராஜே சிந்தியா 
இந்தியா

ராஜஸ்தானில் பா.ஜ.க. வென்றால் வசுந்தரா முதல்வர் ஆவாரா?- உட்கட்சி மல்லுக்கட்டு!

Staff Writer

நாளை வெளியாகவுள்ள நான்கு மாநிலத்தேர்தல் முடிவுகளில், ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்தால் முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியா மூன்றாம் முறையாக அப்பதவியில் அமர்வாரா என்பது பரபரப்பான பேச்சாகியுள்ளது. 

இராஜஸ்தான் மாநிலத்தில் தனிப் பெரும் செல்வாக்கைக் கொண்ட முன்னாள் அரச வம்சத்தைச் சேர்ந்த வசுந்தரா ராஜே, சில ஆண்டுகளாகவே ஓரம் கட்டப்பட்டார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அணுக்கமானவர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. மாநிலத்தில் இப்படியான ஒற்றை நபர் செல்வாக்கை மோடி- அமித்ஷா கூட்டணி ரசிக்கவில்லை என்பது வெளிப்படை. 

இந்த நிலையில், தேர்தல் நடைபெற்ற199 தொகுதிகளில் 100+தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றுவிட்டால், கட்சித் தலைமை கைகாட்டும் ஒருவர்தான் அங்கு முதலமைச்சராக வரமுடியும். அப்படி பதவியைப் பிடிக்க, அரச வம்சத்தைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா குமரி, மைய அமைச்சர் பூபேந்தர் யாதவ், அஸ்வினி வைஷ்ணவ், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா,ஆல்வா எம்.பி. மக்ந்த பாலக்நாத் ஆகியோர் வரிசைகட்டி நிற்கிறார்கள். 

ஒருவேளை பா.ஜ.க.வுக்கு 90+ என்கிற அளவில் தொகுதிகள் கிடைத்தால், வேறு கட்சிகள், சுயேச்சைகள் என தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து, வசுந்தரா முதலமைச்சராக முயல்வார் என்று கூறப்படுகிறது. 

ஏனென்றால், மோடி- அமித்ஷா தலைமைக்குப் பிறகு கட்சியில் ஒதுக்கப்பட்டாலும் தனக்கென தனி செல்வாக்கைக் கொண்ட தலைவராக வசுந்தரா இருப்பதை அவரை விரும்பாத சக கட்சியினரும் ஒப்புக்கொள்ளும் உண்மையாக இருக்கிறது. எனவே, அப்படியான நிலைமை வந்தால் கட்சியின் ஆட்சி வரவேண்டும் என்பதற்காக, வசுந்தராவே மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆக்கப்படவும் வாய்ப்பு உண்டு!

எதுவும் நாளை தெரிந்துவிடும்!