இந்தியா

கல்யாணம் பண்ணாமல் சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு 3 மாதம் சிறை! - வட மாநிலத்தில் அதிரடி சட்டம்

Staff Writer

உத்தராகண்ட் மாநிலத்தில் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதற்கான மசோதாவை அங்குள்ள ஆளும் பா.ஜ.க. கூட்டணி முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நாட்டில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் மதத்துக்கு மதம் வேறுபட்ட வழிமுறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதற்குப் பதிலாக அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ப்ரே சட்டத்தைக் கொண்டுவருவதே பொது சிவில் சட்டமாகும். நாடுமுழுவதும் இதைக் கொண்டுவர பா.ஜ.க. அரசு முயற்சிசெய்து வருகிறது.

புஷ்கர் சிங் தாமி

இந்நிலையில் உத்தராகண்ட் மாநில அரசு இதை அம்மாநிலத்தில் கொண்டுவந்துள்ளது.

இதில் இடம்பெறும் முக்கியமான அம்சங்களாவன:

பெண்ணுக்கு குறைந்த பட்ச திருமண வயது 18, ஆணுக்கு 21. மீறினால் ஆறு மாதம் சிறை

திருமணம் ஆனபின்னர் 60 நாட்களுக்குள் கட்டாயமாக திருமணம் பதிவு செய்யப்படவேண்டும்.

இந்த சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறை.

பலதார மணம், இரு தார மணம் ஆகியவை தடை செய்யப்படுகின்றன. ஹலாலா, இதாத், முத்தலாக் போன்றவற்றுக்குத் தடை. மீறினால் 3 ஆண்டுகள் சிறை.

மணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தம்பதியர் தாங்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்த ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யவேண்டும். இல்லையெனில் 3 மாதம் சிறை.

உட்பட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதுபோன்ற சட்டத்தைக் கொண்டுவர மாநிலங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இந்த உத்தராகண்ட் சட்டம் திருமணத்தைப் பொறுத்தவரை தனிநபர் உரிமையில் தலையிடுவதாக உள்ளது என கருத்து தெரிவிக்கப்படுகிறது. இச்சட்டம் மாநிலத்துக்கு வெளியே வாழும் உத்தராகண்ட்வாசிகளுக்கும் பொருந்தும் என்பதும் விமர்சனத்துக்கு உரியதாக உள்ளது.