கல்விக்கட்டணம் செலுத்தாத 100க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் சாலையில் அமரவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் ஷியாம்ராஜி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விக்கட்டணம் செலுத்தாததால் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் சாலையில் கொளுத்தும் வெயிலில் அமர வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
சாலை மற்றும் வயல்களுக்கு அருகில் அசுத்தமான இடத்தில் அமர வைக்கப்பட்டதால், பல மாணவர்கள் கண்ணீருடன் தலைகுனிந்தபடி இருந்துள்ளனர். இதனை வீடியோ எடுத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு அனுப்பிவைத்து மிரட்டியுள்ளனர் அந்த பள்ளியின் முதல்வர்.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை வெயிலில் அமர வைத்த அப்பள்ளியின் முதல்வர், ஷைலேஷ் குமார் தெரிவிக்கையில், “கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாணவர்களின் பெற்றோர்களை கண்டிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாமலும் இருக்கத்தான் இதை செய்தேன்.
ஒரு மாணவருக்கு ரூ.10,000 முதல் லட்சங்கள் வரை கட்டணம் நிலுவையில் இருந்ததால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வங்கியின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் எனக்கு இதை தவிர வேறு வழியில்லாமல் போனது. இதனால், ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருப்பின் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.