அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ள பூட்டு 
இந்தியா

அயோத்தியை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு!

Staff Writer

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா நெருங்கிவரும் நிலையில் உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ எடை கொண்ட லட்டு ஆகியவை அயோத்திக்கு வந்தடைந்தது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம்- பிரதிஷ்டை விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

கோயில் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நன்கொடைகளையும், பரிசுப் பொருள்களையும் அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்தவகையில், 400 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் சாவியை அலிகாரில் இருந்து அயோத்திக்கு வந்தடைந்தன. இந்த பூட்டு இந்த மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோயிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

அலிகார் மாநிலம் நோரங்காபாத்தில் வசிக்கும் சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி ஷர்மா தம்பதியரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டு செய்யப்பட்டது. சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமானார். இந்த பூட்டை அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசளிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

அதேபோன்று ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் மூலம் 1,265 கிலோ லட்டு தயாரிக்கப்பட்டது. இந்த லட்டும் அயோத்திக்கு வந்தடைந்துள்ளது.