டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ஆ ம்தேதி கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 26ஆம் தேதி சிபிஐ-யும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தனக்கு ஜாமின் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு அர்விந்த் கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்போது பிறப்பித்த உத்தரவு:
1. கெஜ்ரிவாலை கைது செய்ததில் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன.
2. ஜாமினில் வெளியே செல்லும் கெஜ்ரிவால் வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது. பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். முதல்வர அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்த நிலையில், தற்போது சி.பி.ஐ. வழக்கிலும் உச்சநீதின்றம் ஜாமின் வழங்கி உள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து, அவர் இன்று விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.