வீரேந்திர சேவாக் - விஷ்ணு விஷால் 
இந்தியா

இந்தியா எனும் பெயர் பெருமிதமாக இல்லையா? - வீரேந்திர சேவாக்கிறகு விஷ்ணு விஷால் கேள்வி

Staff Writer

இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் வைப்பது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ள கருத்துக்கு, நடிகர் விஷ்ணு விஷால் பதிலடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மாளிகை சார்பில் அளிக்கப்படும் விருந்துக்காக, வழங்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத குடியரசுத்தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இது பரவலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இதை வரவேற்றுள்ள ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாமெல்லாம் பாரத மக்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். நம்முடைய உண்மையான பெயரான பாரத் என்பதை அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது. பிசிசிஐ, ஜெய்ஷாவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரத் என நெஞ்சில் எழுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

சேவாக்கின் இந்த கருத்திற்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடியாகக் கருத்து கூறியுள்ளார். சேவாக்கின் ட்விட்டர் பதிவை ரீ ட்வீட் செய்து, ‘இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்குப் பெருமை சேர்க்கவில்லையா? என்று விஷ்ணு விஷால் கேட்டுள்ளார்.