ரத்தன் டாடா 
இந்தியா

அவமானப்படுத்திய போர்டு கம்பெனி: பழிக்குப் பழிவாங்கிய டாடா! இனிப்பான வெற்றிக்கதை!

முத்துமாறன்

எண்பத்தியாறு வயதில் தன்னந்தனியாக வாழ்ந்து மறைந்த ரத்தன் டாட்டா இந்தியத் தொழில்துறையில் அபூர்வ மனிதர். தன் நிறைவேறாத காதலுக்காக தனியாக வாழத்துணிந்த டாட்டா, தொழில்துறையில் எதையும் விட்டுக்கொடுப்பவர் அல்ல. மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்த டாட்டா வலிமையான நெஞ்சுரம் கொண்டவர்.

1998இல் முதல் முதலாக இந்தியாவிலேயே தயாரான காராக டாடா இண்டிகாவைத் தயாரித்து விற்பனை செய்தார். டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் முயற்சி. இந்த கார் தயாரிப்பில் டாட்டா பெரும் கவனம் செலுத்தினார். தயாரிப்பு முடிந்ததும் முதல் காரை அவரே ஓட்டிச் சென்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜப்பான், அமெரிக்க கார்களை விரும்பிய இந்தியர்களிடம் இது எடுபடவில்லை. எடுத்த எடுப்பில் டாட்டா மோட்டார்ஸ் பெரும் இழப்பைத் தழுவியது.

போர்டு நிறுவனத்தின் தலைவர் பில் போர்டுவுடன் பேச்சுவார்த்தை. பில் பேச்சுவாக்கில் டாட்டாவைக் குத்திக்காட்டினார். ' உமக்கு ஏன் கார் தயாரிப்பு நிறுவனம்? பயணிகள் கார் தயாரிப்பில் அனுபவமே இல்லாதபோது இதைச் செய்யலாமா? செய்தால் நஷ்டம்தான் ஏற்படும். உங்களுக்கு உதவுவதற்காகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை நாங்கள் வாங்குகிறோம்.' என்றார்.

வெளியே வந்த டாட்டா இந்த கிண்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. நாம் இதை விற்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். பிறகு டாட்டா இண்டிகாவின் டிசைனை கடுமையாக உழைத்து மாற்றினர். மிக அதிகம் விற்பனையாகும் காராக அது மாறியது. டாட்டா மோட்டார்ஸும் பெரியதாக வளர்ந்துவிட்டது.

அடுத்த பத்தாண்டில் 2008இல் அமெரிக்காவை பெரும் பொருளாதார நெருக்கடி சூழ்ந்தது. போர்டு கம்பெனி திவால் ஆகும் நிலை. அந்நிறுவனத்தின் ஜாக்குவார், லேண்ட் ரோவர் ஆகிய பிராண்டுகளை விற்றால்தான் தாக்குப்பிடிக்கும் நிலை.

டாட்டா அந்த இரு பிராண்டுகளையும் 2.3 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார்

இம்முறை டாட்டா 'உங்களுக்கு உதவவே இதை வாங்குகிறோம்' என வார்த்தைகளால் சொல்லவில்லை!

அமைதியாகச் செயலில் காட்டினார். சிறந்த பழிவாங்குதல் என்பது எதிரியைவிட மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவதுதான்!