சக்ரபாணி 
இந்தியா

நிலவை இந்து ராஷ்டிரம் என அறிவிக்கச் சொல்கிறார் சுவாமி சக்ரபாணி!

Staff Writer

நிலவை இந்து ராஷ்டிராவாகவும், சந்திராயன்-3 தரை இறங்கிய இடத்தை அதன் தலைநகரமாகவும் அறிவிக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பெங்களூருவில் நேரில் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். அந்நிகழ்வில் அவர் பேசுகையில், சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என அழைக்கப்படும் என அறிவித்தார்.

விண்வெளியில் உள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த பெயரை எப்படி வைக்கலாம் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி சர்ச்சைக்குரிய வகையில் கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில்,“ நிலவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” என்றும், “சந்திராயான் -3 விண்கலம் தரை இறங்கிய இடத்தை நிலவின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்; இதன் மூலம் ஜிகாத் தீவிரவாதிகள் அங்கு செல்லமுடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதன் மூலம் கவனத்தை ஈர்ப்பவரான சக்கரபாணி, கொரோனா முதல் அலையின் போது பசு கோமியம் விருந்து கொடுத்தவர் என்பது நினைவிருக்கலாம்.