மணீஷ் சிசோடியா 
இந்தியா

அமலாத்துறை, சி.பி.ஐ. வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின்!

Staff Writer

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அவரை சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிசோடியா தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் சிசோடியா. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இத்துடன் சில நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டது. ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram