நாடளவில் பின்தங்கிய சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உள் ஒதுக்கீடு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என கடந்த ஆகஸ்ட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து வி.சி.க. உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளும் தனி நபர்களும் சீராய்வு மனுக்களைத் தாக்கல்செய்தனர்.
அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மாதம் 24ஆம்தேதியன்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. அதன் ஆணை இன்று வெளியிடப்பட்டது.
முன்னதாக, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, உள் ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்ததால், தமிழ்நாட்டில் அருந்ததியர், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாமல் நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வரும் என பரபரப்பு இருந்துவந்தது.
இந்த நிலையில், இன்று இப்படியான தீர்ப்பு வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.