மக்களவையில் எம்.பி.க்கள் பதவியேற்கும்போது முழக்கமிடுவதற்கு தடைவிதிக்கும் வகையில் மக்களவை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கடந்த ஜூன் 24 & 25 தேதிகளில் பதவியேற்றனர். அப்போது உறுதிமொழியை வாசித்தபின் பல்வேறு விதமான முழக்கங்களை எழுப்பினர்.
குறிப்பாக ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே, அரசியல் சாசனம் வாழ்க, இந்து நாடு வாழ்க என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் ஏ.ஐ.எம்.ஐ. எம். தலைவர் ஒவைசி எம்.பி. பாலஸ்தீன ஆதரவு முழக்கம் எழுப்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே மோதலும் உருவானது.
இந்த நிலையில், மக்களவையில் எம்.பி.யாக பதவியேற்கும்போது முழக்கம் எழுப்பத் தடை விதிக்க வகை செய்யும் வகையில் மக்களவை விதிகளில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா திருத்தம் செய்துள்ளார்.
அந்தவகையில் சபாநாயகரின் வழிகாட்டுதல்களில் புதிய பிரிவு ஒன்றை சேர்த்து உள்ளார். அதன்படி உறுப்பினர்கள் பதவியேற்பின்போது உறுதிமொழியின் முன்னொட்டு அல்லது பின்னொட்டாக எந்தவொரு வார்த்தையையோ, வெளிப்பாட்டையோ பயன்படுத்தக்கூடாது என புதிய பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.