இன்னும் பிரதமர் மோடிக்கு தன் கொள்கைகளையும் நடத்தைகளையும் மக்கள் இந்த தேர்தலில் நிராகரித்துவிட்டார்கள் என்பது புரியவில்ல என சோனியா காந்தி கூறி உள்ளார்.
அவர் எழுதி பத்திரிகை ஒன்றில் இன்று (29-06-2024) வெளியாகி உள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:
மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஆளுங்கட்சி கோரியது. எங்களைச் சந்தித்த பிரதமரின் தூதுவர்களிடம் இந்தியா கூட்டணி சார்பில் நாங்கள் சபாநாயகருக்கு ஒருமித்த ஆதரவு தருகிறோம். ஆனால் மரபுப்படி எதிர்க்கட்சியினருக்கு துணை சபாநாயகர் பதவியைத் தரவேண்டும் எனக் கேட்டோம். இந்த நியாயமான கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்த ஆட்சி கடந்த மக்களவையில் அரசியல் சாசனப் பதவியான துணை சபாநாயகர் பதவிக்கு யாரையுமே நியமிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இவ்வாறு செல்லும் இந்த கட்டுரையில் பிரதமர் மோடியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை கடுமையாகக் குறை கூறி உள்ளார் சோனியா.
‘’ நாடாளுமன்றத்தை பயனுள்ள வகையில் நடத்தி எதிர்க்கட்சிகள் தங்கள் ஒத்துழைப்பைத் தருவோம் எனக்கூறி உள்ளன. ஆனால் இதற்கு ஆளுங்கட்சி சார்பில் வரும் எதிர்வினைகள் சரியாக இல்லை. ஆனாலும் ஆளுங்கட்சி சார்பில் நமது ஜனநாயக் கடமைகளை ஆற்ற இனியாவது முன்வருவார்கள் என நம்புகிறோம்'' என்று அவர் கூறி உள்ளார்.
கடந்த தேர்தலில் 400க்கும் மேல் இடங்களைப் பெறுவோம் என பாஜக கூட்டணி பிரச்சாரம் செய்தது. ஆனால் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற இயலாமல் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ளது.18வது மக்களவையின் ஆரம்பத்திலேயே ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி இருக்கும் நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தியின் இக்கட்டுரை ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது.