அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாகப் போயிருக்கிறார், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி. கடந்த திங்களன்று வாசிங்டனில் இந்திய வம்சாவளியினர் இடையே பேசுகையில், இந்தியாவில் சீக்கியர் உட்பட பல மதத்தினரின் உரிமைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறிப்பிட்ட பிரிவினரைவிட, மற்ற மதங்கள், மொழிகள், சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் கீழானவையாகக் கருதுகிறது என்றும் இராகுல் பேசினார்.
அவரின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மைய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எப்போதுமே வெளிநாட்டில் போய் இந்திய எதிர்ப்பாகப் பேசுவது இராகுலின் இயல்பாகப் போய்விட்டது என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இராகுலின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி, பா.ஜ.க. ஆதரவு சீக்கியர்கள் இராகுலின் தாயார் சோனியா காந்தியின் தில்லி, 10, ஜன்பத் இல்லத்தின் முன்பாகப் போராட்டம் நடத்தப் புறப்பட்டனர். தில்லி பாஜக தலைவர் ஆர்பி சிங் தலைமையிலான அவர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர்.
இராகுல் தன் பேச்சின் மூலம் சீக்கியர்களை இழிவுபடுத்திவிட்டார் என்றும் அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.