உச்சநீதிமன்றம் 
இந்தியா

மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் இல்லை; டி.ஜி.பி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

Staff Writer

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது, டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சொலிசிடர் ஜெனரல்துஷர் மேத்தா, ‘‘வன்முறை தொடர்பாக 6,523 முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவுசெய்யப்பட்டன. இவற்றில் 11 எப்.ஐ.ஆர்.கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்புடையவை. பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்”என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ‘‘மணிப்பூரில் மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவரம் எங்கே? இது தொடர்பாக யாரும் கைதுசெய்யப்பட்டுள்ளனரா? நாங்கள்6,000 எப்.ஐ.ஆர்.களை பார்த்துவிட்டோம்” என்றார்.

இதற்கு பதில் அளித்த துஷர் மேத்தா, ‘‘இந்த தரவுகளில் சில பிழைகள் இருக்கலாம். மே 15ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட ஜீரோ எப்.ஐ.ஆர்.கள், ஜூன் 16ஆம் தேதியன்று வழக்கமான எப்.ஐ.ஆர்.களாக மாற்றப்பட்டுவிட்டன. பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைது விவரம் என்னிடம் இல்லை”என்றார்.

இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி ‘‘மே 4ஆம் தேதி நடந்த சம்பவத்துக்கு, ஜூலை 26-ம் தேதியில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில வழக்குகளை தவிர, மற்ற வழக்குகளில் கைது நடவடிக்கை இல்லை. போலீஸ் விசாரணை மிக மந்தமாக நடந்துள்ளது. எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எந்த கைதும் இல்லை. கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களைக்கூட பதிவு செய்யப்படாத சூழல் இருந்துள்ளது.

சட்டம், ஒழுங்கு முற்றிலும் இல்லை. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அடுத்த விசாரணை திங்கள்கிழமை நடைபெறும்போது, மணிப்பூர் டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும். சம்பவம் நடந்த தேதிகள், எப்.ஐ.ஆர்பதிவு செய்யப்பட்ட தேதிகள், சாட்சியங்கள் பெறப்பட்ட தேதிகள், கைது செய்யப்பட்ட தேதிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மணிப்பூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.