அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறினால் தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறி உள்ளது.
அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்து மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.
தேர்தல் பத்திர விவகாரத்தில் நாங்கள் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகின்றன. இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்ல, எஸ்பிஐ வங்கி தரும் விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
கடந்த பிப்ரவரி 15 அன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், மத்திய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்ததுடன் அந்த தேர்தல் பத்திரங்களை வழங்கிய வங்கியான எஸ்பிஐ, அதுபற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் எனக் கூறி இருந்தது. ஆனால் அவற்றை வெளியிட ஜூன் 30 வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ கடந்த மார்ச் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்டவாறு ஆணை பிறப்பித்துள்ளது.