ஒடிசா, பூரி பா.ஜ.க. வேட்பாளர் சாம்பிட் பத்ரா 
இந்தியா

கடவுள் ஜெகநாதரே மோடியின் பக்தர்தான்- பூரி வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!

Staff Writer

ஒடிசா மாநிலம் பூரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் அக்கட்சியின் தேசியப் பேச்சாளர்களில் ஒருவருமான சாம்பிட் பத்ரா, சர்ச்சையாகப் பேசி மாட்டிக்கொண்டுள்ளார்.

அண்மையில் பிரதமர் மோடி பூரியில் பிரச்சாரம் செய்தபோது, கூட்டத்தில் பேசிய சாம்பிட் பத்ரா பேசியதுதான், சர்ச்சைக்குக் காரணம்.

அப்போது,” இலட்சக்கணக்கான மக்கள் மோடியைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். கடவுள் பூரி ஜெகநாதரே, மோடியின் ஒரு பக்தர்தான். நாம் அனைவரும் மோடியின் குடும்பத்தினர். இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது என்னை என்னாலேயே கட்டுப்படுத்தமுடியாதபடி உணர்ச்சி மேலிடுகிறேன்.” என்று சாம்பிட் பத்ரா குறிப்பிட்டார்.

ஒடிசா முழுவதும் மதிப்பும் நம்பிக்கையும் கொண்ட பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு எத்தனையோ ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்துகுவியும் நிலையில், பத்ராவின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பத்ரா தன் பேச்சுக்காக கைகூப்பி மன்னிப்பு கேட்கவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ, இது மாபெரும் கடவுள் நிந்தனை எனக் குறிப்பிட்டது.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் கண்டன வரிசையில் சேர்ந்துகொண்டார். “மகாபிரபு ஸ்ரீ ஜெகநாதர் இந்த பிரபஞ்சத்துக்கே கடவுளானவர். அவரைப் போய் ஒரு மனிதருக்கு பக்தர் எனக் கூறுவது கடவுளை அவமானப்படுத்துவதாகும். ஜெகநாதரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் காயப்படுத்துகிறது. பா.ஜ.க.விடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், கடவுளை உங்கள் அரசியலுக்குள் கொண்டுவராதீர்கள் என்பதுதான்!” என்று நவீன் தன் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பத்ராவையும் பா.ஜ.க.வையும் ஒரு பிடி பிடித்தார். “ அவர்கள் தங்களைக் கடவுளுக்கும் மேலானவர்கள் எனக் கருதத் தொடங்கிவிட்டார்கள். இது அராஜகத்தின் உச்சகட்டம். கடவுளை மோடியின் பக்தன் என்பது கடவுளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்.” என்று கெஜ்ரிவால் கண்டித்தார்.

பிரச்னை பெரிதானையடுத்து, பத்ரா சட்டென பல்டியடித்து, ”நாம் எல்லாருமே ஜெகநாதரின் பக்தர்கள்தான். மோடியும் அவரின் பக்தரெனச் சொல்லவே விரும்பினேன். ஆனால் வாய்தவறிச் சொல்லிவிட்டேன்.”என்று எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பாக, முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு அளித்த பதிலில், “ஒன்றுமே இல்லாததை விசயம் ஆக்காதீர்கள். வாய்தவறிப் பேசுவது நம் அனைவருக்கும் இயல்புதானே!”என்று சமாளித்துள்ளார்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்கிறார் போலும்!