டிட்டோவுடன் ரத்தன் டாடா 
இந்தியா

வளர்ப்பு நாய்க்காக ரத்தன் டாடா எழுதி வைத்த உயில்!

Staff Writer

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாயான டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க உயிலில் சொத்து எழுதி வைத்துள்ளார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக சமீபத்தில் காலமானார். செல்லப் பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அவர், நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் தனது வீட்டில் ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார்.

மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வம் இது. ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயிலில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார்.

டிட்டோ என்ற வளர்ப்பு நாயை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துக்கொண்டார். ரத்தன் டாடாவிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் இறந்ததைத் தொடர்ந்து புதிதாக தத்து எடுத்த நாய்க்கு அதே பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இந்த டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க உயிலில் எழுதி வைத்திருக்கிறார். இது தவிர ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம்.

இது தவிர ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். அதோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram