ரத்தன் டாடாவின் பல நாள் கனவு ஒன்று சமீபத்தில் நனவாகி இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பாக அவர் வளர்த்த செல்ல நாய்களில் ஒன்றுக்கு காலில் எலும்பு முறிவு. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர் கால்நடை மருத்துவர்கள். ஆனால் இந்தியாவில் அதைச் செய்யும் வசதி இல்லை. எனவே அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுபோனார். அங்கே காலதாமதம் ஆகிவிட்டது எனச் சொல்லி கால் மூட்டை அசைய முடியாமை பொருத்திமட்டும் அனுப்பினர்.
அதிலிருந்து அவருக்கு மும்பையிலும் மிகச் சிறந்த கால்நடை மருத்துவமனை ஒன்றை அமைக்கவேண்டும் என ஆசை.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த மருத்துவமனை மும்பையின் மையப்பகுதியில் செயல்படத் தொடங்க உள்ளது. டாடா ட்ரஸ்ட்ஸ் செல்லப்பிராணிகள் மருத்துவமனை அங்குள்ள மகாலட்சுமி என்ற இடத்தில் செயல்படத் தயாராக உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா மெமோரியல் மருத்துவமனை, டாடா இன்ஸ்டிடூட் ஆப் சோசியல் சயன்ஸ், இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயன்ஸ்(பெங்களூரு) போன்ற புகழ்பெற்ற டாடா நிறுவனங்கள் வரிசையில் இந்த செல்லப்பிராணிகள் மருத்துவமனையும் ஒரு முக்கிய வரவு.
தரைத்தளம், அதற்கு மேல் நான்கு மாடி என்று அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் செல்லபிராணிகளுக்கு தங்கும் வசதி, ஐசியூ வசதி, அனைத்து பரிசோதனை வசதிகளும் அமைந்துள்ளன. 2.2 ஏக்கர் இடத்தில் 165 கோடி செலவில் இது கட்டப்பட்டுள்ளது.
ரத்தனுக்கு செல்லப்பிராணிகளில் நாய்கள் மிகவும் பிடித்தமானவை. டாடா நிறுவனத்தின் தலைமையகமான பாம்பே ஹௌஸில் தெருநாய்களுக்கான காப்பகம் ஏற்கெனவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.