மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் 11 மணி நேர விவாதத்துக்குப் பின் நேற்று இரவு நிறைவேறியது.
மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான அரசியலமைப்பு சட்டத்தின் 128ஆவது திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த புதன் கிழமை நிறைவேறியது. நேற்று, மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலே மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசினார்.
இதன் மீதான விவாதத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். 11 மணிநேர விவாதத்துக்குப் பின் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 214 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிர்த்து ஒருவரும் வாக்களிக்கவில்லை.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுத்தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் சட்டமாகும்.