இரயில் எஞ்சினையும் ஒரு பெட்டியையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் இடையில் சிக்கி கொல்லப்பட்டார். பீகாரின் பெகுசராய் மாவட்டம் பரவுணி தொடர்வண்டி நிலையத்தில் இன்று இந்தத் துயரம் நிகழ்ந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவுக்கும் பரவுணிக்கும் இடையே ஓடும் விரைவுரயில் வண்டியானது பரவுணி நிலையத்தில் இன்று தனியாகப் பெட்டிகள் பிரிந்தநிலையில், அதை இணைக்கும் பணி தொடங்கியது. அப்போதே 35 வயதான அமர் குமார் ராவத் என்பவர் இஞ்சினுக்கும் பெட்டிக்கும் இடையில் வேலைசெய்துகொண்டிருந்தபோது, இரயில் ஓட்டுநர் திடீரென எஞ்சினை இயக்கிவிட்டார்.
சரியாக இரண்டு பெட்டிகளை இணைக்கும் பகுதியில் இருந்த அமர், பரிதாபகரமாக உயிரிழந்தார். நேரில் பார்த்த பயணிகள் சத்தமிட்டு அலறியதையடுத்து, ஓட்டுநர் எஞ்சினை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து சோன்பூர் கோட்ட இரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பரவுணி நிலையப் பணியாளர்கள் அனைவரையும் கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
துறைரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொல்லப்பட்ட ஊழியரின் குடும்பத்துக்கு விதிகளின்படி வேண்டியன செய்யப்படும் என்றும் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.