இனிப்பு கடை ஊழியர்களுடன் ராகுல்காந்தி 
இந்தியா

என்னய்யா மனுஷன்...! ராகுல் செய்த பாசக்கார சம்பவம்!!

Staff Writer

கோவை சிங்காநல்லூர் பகுதியில் இனிப்பு கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்காக ராகுல் காந்தி இனிப்பு வாங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ராகுல்காந்தியும் இந்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். சிங்காநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, தனது காரை சாலையோரம் நிறுத்தச் சொன்ன ராகுல், காரிலிருந்து இறங்கி, சாலை நடுவே இருந்த கான்கிரீட் தடுப்பை ஏறித்தாண்டி அங்கிருந்த ஒரு இனிப்பு கடைக்கு சென்றார்.

அவரைப் பார்த்ததும் கடையின் ஊழியர்கள் பரப்பரப்பாக, ஒரு கிலோ மைசூர்பாகு, ஒரு கிலோ ஜிலேபி வாங்கினார். யாருக்காக இனிப்பு வாங்குகிறீர்கள் சார்? என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்க, “என் சகோதரர் ஸ்டாலினுக்கு தான்” என்று பதிலளிக்கிறார். வாங்கிய இனிப்பு வகைகளுக்கான தொகையை ராகுல் காந்தியே கொடுத்தார்.

பின்னர், அந்த கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்ட ராகுல், வாங்கிய இனிப்பு வகைகளை பேப்பர் பேக்கில் போட்டு கொண்டும் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு தானே கையில் வைத்துக்கொண்டு சென்றார். ராகுல் பொதுக்கூட்ட மேடையை அடைந்ததும், அங்கு அவரை வரவேற்ற, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அந்த இனிப்பு பையைக் கொடுத்தார். அதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

இந்த வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, தமிழகத்தில் தொடர் தேர்தல் பிரசாரத்துக்கு இனிமை சேர்க்கும் விதமாக எனது சகோதரர் ஸ்டாலினுக்கு சிறிது இனிப்பு வாங்கி கொடுத்து மகிழ்ந்தேன் என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.