தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு சாத்தியமா இல்லையா? என்ற விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடக அரசு தனியார் தொழில் நிறுவனக்களில் கன்னடர்களுக்கு என 75% இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கொண்டுவந்த மசோதா பெரும் புயலைக் கிளப்பியது. தொழில் துறையினர் எதிர்ப்பால் இது நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா மட்டும் இதைக் கொண்டுவந்த மாநிலம் அல்ல. இதற்கு முன்னதாக, 2020இல் ஹரியானாவும் 2019இல் ஆந்திராவும் 2023 ஜார்கண்ட் அரசும் தனியார் துறையில் இடஒதுக்கீடு மசோதாவை சம்பள வரம்புடன் கொண்டு வந்தன. அவற்றின் நிலை என்ன ஆனது?
ஆந்திரா
முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் (2019), தனியார் துறை வேலை வாய்ப்புகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா கொண்டு வரப்பட்டது. மாதம் 30ஆயிரம் வரை சம்பளம் உள்ள பணிகளில் இடஒதுக்கீடு கட்டாயம் என்று சொல்லப்பட்டது.
இந்த இடஒதுக்கீடு மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என ஆந்திரா உயர்நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
ஹரியானா
தனியார் நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹரியானா அரசும் கடந்த 2020ஆம் ஆண்டு மசோதாவை நிறைவேற்றியது. இதை எதிர்த்து குருகிராம் தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட பலர் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், உயர்நீதிமன்றம் தனியார் துறை இடஒதுக்கீடு மசோதாவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஜார்கண்ட்
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கடந்த 2023 டிசம்பரில், குரூப் – III, குரூப் – IV பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 100% இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்ததோடு தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
பின்னர் மீண்டும் அதே மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டாலும், அதை அம்மாநில அரசு ஆளுநருக்கு அனுப்பி வைக்கவில்லை. இந்த மசோதா இன்னும் சட்டமாகவில்லை.
உச்சநீதிமன்றம் என்ன சொல்லுகிறது?
தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர்பாக ஹரியானா மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டதோடு, ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநில அரசுகள் கொண்டு வந்த தனியார் துறை மசோதாவை சட்டப்பூர்வமாக ஆய்வு செய்யவேண்டும் என்றது.
தனியார் துறையில் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மாநில அரசுகள் மசோதாக்களை நிறைவேற்றினாலும், அது சட்ட வடிவம் பெறுவதில் சிக்கல் நீடிக்கவே செய்கிறது.