நொய்டாவில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, இடது கண்ணில் உள்ள பிரச்னைக்கு, மருத்துவர் தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் நிதின். இவரின், 7 வயது மகன் யுதிஷ்திர் என்பவருக்கு இடது கண்ணில் நீர் கசிந்தபடி இருந்தது. இதனால், நொய்டாவில் உள்ள ஆனந்த் ஸ்பெக்ட்ரம் என்ற தனியார் மருத்துவமனையில், சிறுவனை கடந்த 12ஆம் தேதி அனுமதித்தனர்.
சிறுவனின் கண்களை பரிசோதித்த மருத்துவர் ஆனந்த் வர்மா, இடது கண்ணில் பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை உதவியுடன் அகற்ற முடியும் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்காக 45,000 ரூபாய் கட்டணம் பெற்றுள்ளனர்.
சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்த பின் தான், இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருப்பதை தாய் கவனித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளிக்காத மருத்துவமனை நிர்வாகம், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் மோசமாக நடந்து கொண்டு உள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் போலீசிலும், தலைமை மருத்துவ அதிகாரியிடமும் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.