குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு  Office
இந்தியா

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை; 3 மாநில எல்லைகளில் பலத்த பாதுகாப்பு!

Staff Writer

குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருவதையொட்டி, 3 மாநில எல்லையில் உள்ள சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் இன்று வரும் குடியரசு தலைவர், அங்கிருந்து சாலை வழியாக தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்குச் செல்கிறார். முகாமில், ஆஸ்கா் விருது பெற்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்தித்து வாழ்த்துகிறாா். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் சாலை வழியாக மசினகுடிக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூருக்குச் சென்று பின்னர் சென்னைக்கு வருகிறார்.

சென்னை விமான நிலையத்துக்கு மாலை 6 மணியளவில் வரும் அவர், அங்கிருந்து காா் மூலம் கிண்டி ஆளுநர் மாளிகை சென்று தங்குகிறார்.

நாளை காலை 9.30 மணியளவில் ஆளுநர் மாளிகை மைதானத்தில் குடியரசுத் தலைவருக்கு முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையடுத்து கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் அரங்கில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சிக்குப் பின்னர், காரில் ஆளுநர் மாளிகைக்கு திரும்பும் திரெளபதி முா்மு, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை காா் மூலம் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மீண்டும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை சென்னை திரும்புகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை 6.15 மணியளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பொறுப்பேற்ற பின்னர், சென்னைக்கு முதல்முறையாக வருகிறார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். குடியரசுத் தலைவர் வந்து செல்லும் வரை தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள சாலைகள் மூடப்படுகின்றன. குடியரசுத் தலைவர் செல்லும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காரில் அவா் செல்லும்போது, சாலையின் இரு புறங்களிலும் 10 அடிக்கு ஒரு காவலர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார். மேலும், அந்தப் பகுதி முழுவதும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, பாதுகாப்புப் பணியில் சுமார் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்டி - கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள முதல் முறையாக சென்னைக்கு வந்திருக்க வேண்டிய குடியரசுத் தலைவர், தற்போது வருகை தருவது குறிப்பிடத்தக்கது