பிரக்ஞான் ரோவர் கலம் 
இந்தியா

2 வாரப் பணிகளை முடித்தது சந்திராயன் ரோவர்... அடுத்து என்ன?

Staff Writer

சந்திராயன் 3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர் ஊர்திக் கலம் தன்னுடைய 2 வாரப் பணிகளை நேற்றுடன் நிறைவுசெய்தது.

சந்திராயன் 3 விண்கலத்தின் மூலம் கடந்த மாதம் 23ஆம் தேதி விக்ரம் லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரக்ஞான் ரோவர் கலமும் அன்றே தரையிறங்கியது. நிலவின் தரையில் ஊர்ந்துசென்ற ரோவர் ஊர்திக் கலமானது பல ஆய்வுகளையும் மேற்கொண்டது.

நிலவின் தரையில் 10 செ.மீ.வரை தோண்டியெடுத்ததில், அங்கு ஆழத்துக்கு ஏற்ப வெவ்வேறு வெப்பநிலை நிலவுகிறது என்பது தெரியவந்தது. அடுத்தகட்டமாக, அலுமினியம், இரும்பு, ஆக்சிஜன் போன்ற பல தனிமங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இரண்டு வாரங்கள் பணிகளை மேற்கொண்டபின், ரோவர் கலமானது பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டது.

நிலவில் ஒரு பகல் என்பது பூமியின் 14 நாள்கள். அதாவது அடுத்த 14 நாள்களுக்கு ரோவர் ஊர்திக் கலம் இருக்கும் இடத்தில் இரவு நேரம் தொடங்கிவிட்டது. ரோவரில் உள்ள மின்கலமானது தற்போது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தியைக் கொண்டு இயங்கும் ரோவர் கலமானது, வரும் 22ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் அடுத்த சூரிய உதயத்துக்காகக் காத்திருக்கிறது.

அப்போது, ரோவர் மீண்டும் செயல்பட்டு ஆய்வில் ஈடுபடலாம் அல்லது நிலவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக சந்திரயான் ரோவர் இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.