எடியூரப்பா  
இந்தியா

போக்சோ வழக்கு: எடியூரப்பா கைது ஆணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Staff Writer

போக்சோ வழக்கில் எடியூரப்பா எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது ஆணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா மீது கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எடியூரப்பாவுக்கு எதிராக புகாா் அளித்த பெண் கடந்த மாதம் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், எடியூரப்பாவை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இதற்கிடையே இந்த வழக்கு தொடா்பாக ஜூன் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், எடியூரப்பா, தான் டில்லியில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும், பெங்களூரு திரும்பியதும் ஜூன் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் சி.ஐ.டி.க்கு கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத எடியூரப்பாவைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரு, முதலாம் விரைவு நீதிமன்றத்தை சி.ஐ.டி. அணுகியது. இதை ஏற்ற நீதிமன்றம், எடியூரப்பாவை கைது செய்வதற்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணையை நேற்று பிறப்பித்து உத்தரவிட்டது.

இதனிடையே இந்த வழக்கில் எடியூரப்பா எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த கைது ஆணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. அதில், ஜூன் 17ஆம் தேதி வரை எடியூரப்பாவை கைது செய்து தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று ஜூன் 17ஆம் தேதி சி.ஐ.டி. போலீஸார் முன்பு ஆஜராக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.