பிரதமர் மோடி பச்சையாக பொய் சொல்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான்-3 திட்டத்தைவிமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘வாவ், நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்'' என குறிப்பிட்டு ஒருவர் தேநீர் ஆற்றும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவில் அவர் மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்வதாக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரகாஷ் ராஜ், ”சந்திராயன் - 3 எந்தளவிற்கு பிரபலமானதோ அதே அளவுக்கு என்னுடைய ட்வீட்டையும் பிரபலப்படுத்தினார்கள். அவர்களுக்கு நாட்டின் மீதோ, சந்திராயன் மீதோ காதல் இல்லை; என் மீதுதான் வெறுப்பு.
நகைச்சுவை உணர்வைப் புரிந்து கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது. நகைச்சுவை உணர்வுடன் கேள்வி கேட்பது ஆரோக்கியம் தானே.
நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீ கேள்வி கேட்கக் கூடாது என்பது ஒரு வன்முறை தானே. நாம் பதில் கொடுக்க வேண்டி உள்ளது. மௌனம் நல்லதல்ல.
பிரதமர் மோடி நேற்று முன் தினம் ஒரு பொய் சொல்லியிருக்கிறார். தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருப்பதாக. அது தொடர்பாக நான் கேள்வி கேட்டிருக்கிறேன். ஒரு நாடு எதை கேள்வி கேட்க வேண்டும். ஒரு குடிமகனின் நகைச்சுவையையா? பிரதமரின் பொய்யையா? பச்சையாக பொய் சொல்லுகிறார் பிரதமர் மோடி. அது தான் பெரிய குற்றம்” என்றார்.