மக்களவையில் தனக்கு எதிராக கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி. ஒருவருக்கு பிரதமர் மோடி தன் கையால் குடிநீர் வழங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதில் அளித்து பேசினார். 135 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடி பேசினார்.
அப்போது, அவரை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
அப்போது பிரதமர் மோடிக்கு அலுவலக உதவியாளர் குடிநீர் கொண்டு வந்தார். உடனே அந்த குடிநீரை தான் அருந்தாமல், கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரை அழைத்து தண்ணீர் டம்ளரை நீட்டினார். அந்த எம்.பி. தயங்கி நிலையில், பிரதமர் மோடி சிறிது நேரம் டம்ளரை நீட்டியே இருந்தார். உடனே எதிர்க்கட்சி எம்.பி. தண்ணீரை வாங்கிக் குடித்தார். இதன் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் நிலையில், ”சர்வாதிகாரி மோடி தன் பேச்சை இடையூறு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கு மோடி தண்ணீர் வழங்கினார்.” என பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கிண்டலடித்துள்ளார்.