மக்களவையில் ராகுல் காந்தி 
இந்தியா

ராகுல் காந்தியின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்!

Staff Writer

காங்கிரஸ் எம்.பி. இராகுல் காந்தி மக்களவையில் நேற்று பேசிய பல வாசகங்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளன. மக்களவையில் கடந்த இரண்டு நாள்களாக இதன் மீது விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி நேற்று மதியம் இந்த விவாதத்தில் பேசினார். அப்போது பா.ஜ.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதையும் மீறி அவர் பேசி முடித்தார்.

இராகுல் காந்தி நண்பகல் 12.10 மணி முதல் 12.46 மணி வரை மொத்தம் 36 நிமிடங்கள் பேசியுள்ளார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றியுள்ள உரையில் பெரும் பகுதி நீக்கப்பட்டு, 14 நிமிட உரை மட்டுமே நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவை இடம்பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டுள்ளது.

ராகுலின் பேச்சில் இடம்பெற்ற கொலை, துரோகம் போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன என மக்களவைச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, பிரதமர் மோடி, மைய அரசு தொடர்பாக ராகுல் சாடிய பேச்சுகள் நீக்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன.