மோடி - தேவ கவுடா 
இந்தியா

மக்களவைத் தேர்தல்: கர்நாடகத்தில் ம.ஜ.த.வுக்கு 4 தொகுதிகள் - பா.ஜ.க. அறிவிப்பு!

Staff Writer

வரும் மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து, 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதை மாநில பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவ கவுடா பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டாவையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். அந்த சந்திப்பைத் தொடர்ந்து பா.ஜ.க. - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

அதேபோல, ம.ஜ.த. மூத்த தலைவர் தேவகவுடாவும் பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்முடிவில், மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகத்தில், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

“ கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. - ம.ஜ.த. இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கும். மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித் ஷா சம்மதித்துள்ளார்.” என்று எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாண்டியா, ஹசன், பெங்களூர் (ஊரகம்) மற்றும் சிக்பல்லாபூர் ஆகிய நான்கு தொகுதிகளில் ம.ஜ.த. போட்டியிட விரும்புகிறது. இவற்றில் 2019 மக்களவைத் தேர்தலின்போது ஹசன் தொகுதியைத் தவிர, மற்ற மூன்று இடங்களில் பா.ஜ.க.வே வெற்றி பெற்றிருந்தது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ம.ஜ.த. தனித்து போட்டியிடும் என தேவகவுடா ஜூலை மாதம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.