தெருநாய்கள் 
இந்தியா

தெருநாயால் அதிகரிக்கும் குழந்தைகள் மரணம்… பெற்றோர்களே உஷார்!

Staff Writer

ஹைதராபாத்தில் தெருநாய்கள் சூழ்ந்து கடித்ததில் 18 மாதக் குழந்தை உயிரிழந்த நிலையில், கடந்த ஒருவருடத்தில் மட்டும் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தின் சித்திபேட் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத், ஜவஹா் நகருக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு குழந்தையின் தாயார் குழந்தையை பாட்டியிடம் விட்டுவிட்டு அருகிலுள்ள மருந்தகம் சென்றுள்ளார். அப்போது, குழந்தை வீட்டுக்கு வெளியே சென்று விளையாடிக் கொண்டிருந்ததைப் பாட்டி கவனிக்கவில்லை. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சுமார் 15 தெருநாய்கள் இழுத்துச் சென்றுள்ளன. தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்ததில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் மக்களால் மீட்கப்பட்ட குழந்தைக்கு அதே பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அக்குழந்தை, அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தது.

பெற்றோர் அளித்த புகாரில், ஜவஹா் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து, தெருநாய் பிரச்னையைச் சமாளிக்க போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தினார்.

தெலுங்கானாவில் கடந்த ஒருவருடத்தில், தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் 6 குழந்தைகள் கடந்த 3 மாதத்தில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.