வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் இருந்த 500 வீடுகளில், இப்போது 50 வீடுகள்கூட இல்லாத அளவுக்கு அங்கு பாதிப்பு மிகமோசமாக ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் 34 முதல் 49 வீடுகள் மட்டுமே இப்போது இருப்பதாகவும், வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை கிராமமே அழிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை குக்கிராமங்களில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 168 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதில் 9 பேர் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளன.
மேலும், 200-க்கும் அதிகமானோரின் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா வந்தவர்களின் விவரமும் சரியாக தெரியவில்லை.
இதனால், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
மேலும், நிலச்சரிவில் காணாமல் போனோர் பற்றி தகவல் தெரிவிக்க அவசர உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் 807 840 9770 என்ற எண்ணில், காணாமல்போனோர், மருத்துவமனையில் உள்ளோர் பற்றி தகவல் தெரிவிக்கவும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.