நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று ஒரே நாளில் 78 எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.கள் வலியுறுத்தி வருகின்றனர். இன்றும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க.வின் கனிமொழி என்விஎன் சோமு, என்.ஆர்.இளங்கோ உள்பட 45 எம்.பி. கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே, மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், மக்களவையில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி அமளியில் ஈடுபட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று 33 எம்.பி.கள் என, மக்களவையில் மொத்தம் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை 93 எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.