ராம்நாத் கோவிந்த் 
இந்தியா

2024இல் ஒரே நாடு ஒரே தேர்தல்? ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு!

Staff Writer

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி ஆராய, முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஆட்சி முறை உள்ள பல நாடுகளைப் போல, நாடாளுமன்றத்துக்கும் அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்திவருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இதைப் பற்றி அடிக்கடி பேசிவருகிறார்கள்.

நிதிச்சுமை, தேர்தல் நடத்தை விதிகளால் தடைபடும் வளர்ச்சிப் பணிகள் போன்றவை காரணமாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை வேண்டும் என்பது பிரதமர் மோடி வலியுறுத்தும் கருத்து. நாடளவில் இந்த முறைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு இன்று குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரிலேயே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாவைக் கொண்டுவந்து, சட்டமாக்கவும் வாய்ப்பு உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படி சட்டம் கொண்டுவரப்பட்டால், வரும் 2024இல் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.